ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கத்தாரிக்குப்பம் அருகே காரை மடக்கி பைனான்சியரிடம் இருந்து ரூ.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற விவகாரத்தில் பொன்னை அணைக்கட்டு காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த இருவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (45), பைனான்சியரான இவர் ஆந்திரா, சித்தூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து விட்டு அதனை வசூல் செய்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து, அவரும் அவரது ஓட்டுநரும் காரில் வசூல் செய்த பணம் ரூ.15 லட்சம் ரொக்கத்துடன் பொன்னை, கத்தாரிக்குப்பம் வழியாக அம்மூரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, இவரது காரில் பணம் இருப்பதைத் தெரிந்து கொண்ட 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சித்தூரில் இருந்து நம்பர் பிளேட் இல்லாத கார் மூலம் பின் தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கத்தாரிக்குப்பம் அருகே அந்த மர்ம கும்பல், திடீரென பைனான்சியர் சரவணனின் காரை மடக்கி உள்ளனர். மேலும், சரவணன் மற்றும் அவரது ஓட்டுநர் சுந்தர் ஆகிய இருவரையும் மிரட்டியதோடு காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி காரில் வைத்திருந்த ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு, தப்பிச் சென்ற கார் சிறிது தூரத்தில் வயலின் ஓரமாகச் சிக்கிக்கொண்ட நிலையில் நம்பர் பிளேட் இல்லாத காரை அங்கேயே விட்டு விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சரவணனன் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சரவணன் கொடுத்து புகாரின் அடிப்படையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி.முத்துசாமி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மேற்பார்வையில் ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, துணை காவல் ஆய்வாளர்கள் பாஸ்கர் மற்றும் சஞ்சீவிராயன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மர்ம கும்பல் விட்டுச் சென்ற காரை ஆய்வு செய்து அதன் உரிமையாளரை அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட பெங்களூரு பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் (28), சென்னவீரப்பா (30) ஆகிய இருவர் பொன்னை அணைக்கட்டில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகிங் கொடுமையை நிரந்தரமாக ஒழிக்க என்ன வழி? - சட்ட வல்லுநர்கள் கூறுவதென்ன?