ராமநாதபுரம்: பரமக்குடி காந்திஜி நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டுவருகிறது. பரமக்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (55). கணவரை இழந்த நிலையில் வீட்டின் அருகே புட்டு வியாபாரம் செய்துவருகிறார்.
வங்கியில் வைக்கப்பட்ட நகையைத் திருப்புவதற்காக ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயுடன் இன்று (செப்டம்பர் 17) காலை வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் தான் வங்கி மேலாளர் எனக் கூறி பாண்டியம்மாளிடம் இருந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு வங்கியின் வெளியே சென்று ஸ்டாம்ப் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பி வெளியே சென்ற பாண்டியம்மாள் மீண்டும் வங்கிக்குள் வந்து பார்த்தபோது அந்த நபர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததையடுத்து பாண்டியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிசிடிவி காட்சி
இதனையடுத்து பரமக்குடி குற்றப்பிரிவு காவல் துறையினர் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தனர். அதில் அந்த நபர் வங்கிக்குள் வரும் காட்சி மட்டும் பதிவாகியுள்ளது.
சிசிடிவியைக் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். பரமக்குடியில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து மூதாட்டியை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குறைந்தளவிலான காவல்துறையினர்...கஞ்சா விற்பனையை எவ்வாறு தடுக்க முடியும் என நீதிபதி கேள்வி?