ராமநாதபுரம்: சவுதியில் வேலைக்குச் சென்று விபத்தில் இறந்த கணவரின் உடல் என்ன ஆனது என மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துள்ளார்.
அவரின் உடலைக் கொண்டு வரமுடியவில்லை என்றால், அங்கேயே நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், என் வாழ்வாதரத்துக்கு அரசு ஏதேனும் உதவிகள் அளிக்க வேண்டும் எனவும் மனைவி விஜயராணி கோரிக்கை வைத்துள்ளார்.
வேதாளை பகுதியைச் சேர்ந்த விஜயராணியின் கணவர் செல்வம், இரண்டு வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு கட்டட வேலைக்காகச் சென்றுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு அங்கு நிகழ்ந்த விபத்தில் செல்வம் உயிரிழந்துள்ளார்.
இச்சூழலில் கணவரின் உடலை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். ஆனால், விபத்து காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் உடலை இங்கே கொண்டு வருவதில் சிக்கல் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டி விஜயராணி மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாவது மனு அளித்திருந்தார். ஆனால் அதற்கும் எந்த தகவலும் வராததால் இன்று மூன்றாவது முறையாக மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.