தமிழ்நாடு முழுவதும் ‘தலை நிமிரட்டும் தமிழகம் - வியூகம் 2021’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (டிச.30) வருகை தந்தார். கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பரமக்குடி எமனேஸ்வரம் அருகே காந்தி சிலை பகுதியில் பேசிய அவர், “நான் சினிமா நட்சத்திரமாக இருக்கலாம்.
இனி உங்கள் வீட்டில் எரியும் சிறு விளக்காக என்னை அனுமதியுங்கள். தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அதை நாம் இணைந்தே செய்து காட்டுவோம். மக்களின் ஆட்சி மலர வேண்டுமென்றால், நீங்கள் மக்கள் நிதி மய்யத்தின் கையை வலுப்படுத்த வேண்டும்.
நாங்கள் நல்ல திட்டங்களுடன் உங்களை அணுகுகிறோம். ஓய்ந்து போய்யுள்ள தறிகளை மீண்டும் இயக்க செய்ய வேண்டும். தேய்ந்து போயுள்ள அந்த தொழிலை மீட்டெடுக்க வேண்டும், பெண்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு தரும் முதலாளிகளாக உங்களை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சிறிய ஊர்களை பெரிய ஊர்களுக்கு நிகராக மாற்றும் திட்டம் எங்களிடம் உள்ளது. இதனை செய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நதிக்கரை நாகரிகம் கண்ட தமிழ்நாட்டை சாக்கடையாக மாற்றியது இவர்களின் ஊழல் அரசியல் தான். அதனை அகற்றுவோம். தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.
நேர்மை என்பது தான் எங்கள் பலம். இந்த வார்த்தையை உபயோகிக்கக் கூட ஆட்சியாளர்கள் யோசிப்பார்கள். அது நமது பலமாக மாற வேண்டும் என்பது தான் என் ஆசை. உங்கள் வாக்கு என்பது தான் உங்கள் உரிமை. அதை கடமை என்று நினைக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யத்தின் ஆயுதமான நேர்மையை கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள். ஏழ்மைக்கு எதிரான குரல் என்னுடையது அந்த குரல் உங்களுடன் இணையும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க : மோடியின் புகைப்படத்துடன் பாஜக ஊர்வலம்: தடுத்து நிறுத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார்!