தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அதில் இன்று 11 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்த உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு செய்துள்ளார்.
மாவட்டம் முழுவதிலும் 80 இடங்களில் உள்ள 228 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமாக கண்டறியப்பட்டு அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அரசு பணியில் உள்ள நுண் பார்வையாளர்கள் 96 பேர், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து வருகின்றனர்.
இது தவிர அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்கை செலுத்தவும் வாக்காளர்களுக்கு கையை தூய்மைப்படுத்துவதற்கான சானிடைசர்கள் வழங்கப்படுகிறது. தேவையான வாக்காளர்களுக்கு முகக்கவசங்கள், அனைத்து வாக்காளர்களுக்கும் கையுறை வழங்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து வாக்கை செலுத்துகின்றனர்.
இதையும் படிங்க: ஜனநாயகத் திருவிழா: ஓபிஎஸ் வாக்களிப்பு