பரமக்குட, ஐந்து முனை சாலை அருகே கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குக் கிராம கோயில் பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர், சோமசுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், “கிராம கோயில் பூசாரிகளுக்கு ஆண்டு வருமானம் ரூ. 24,000க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் வழங்குகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் வருவாய் ஆய்வாளர்கள் ரூ. 24000க்கு வருமான சான்றிதழ் வழங்குவதில்லை.
எனவே இங்குள்ள கிராம கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளின், ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 24,000இல் இருந்து, ரூ. 72,000ஆக உயர்த்த வேண்டும். கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக, ரூ. 5000 வழங்க அரசு உத்தரவிட வேண்டும். 2001ஆம் ஆண்டு, மதுரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்திய மாநில மாநாட்டில், நான்காயிரம் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.
இதனை தற்போதைய அரசு பின்பற்றவில்லை. பூசாரிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில், பூசாரிகளைச் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.