ராணிப்பேட்டை அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பாக ஆர்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமவளவன் அறிவித்திருந்தார்.
அதன்படி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீரா திரையரங்கம் அருகே மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்தன் தலைமையில், கொலைக்கு காரணமானவர்களை குண்டர் தடுப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமையில் 40 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் காவல்துறையினர் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தலித் இளைஞர்களை படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாமகவை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு