ராமநாதபுரம் அருகே திரு உத்தர கோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி திருக்கோயிலில் இன்றும் நாளையும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இந்த விழாவின்போது மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு சிறப்பு திருமுழுக்குகள் நடைபெற்று மறுநாள் காலை சிலை மீது மீண்டும் சந்தனம் பூசப்படும்.
எஸ்.பி. கார்த்திக் தலைமையில், ஒரு ஏடிஎஸ்பி, ஆறு டிஎஸ்பி உள்பட பாதுகாப்புப் பணியில் 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் போதிய தற்காலிகத் தடுப்புகள் அமைத்து தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும், குப்பைகள் தேங்காத வகையில் சுற்றுப்புற சுகாதாரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதுமட்டுமல்லாமல், அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதுவாக தயார் நிலையில் மருத்துவக் குழுக்கள் அமைத்திடவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திடவும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது மரகத நடராஜரின் மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திருமுழுக்குகள் நடைபெற்றுவருகின்றன.
நாளை (டிச. 30) மீண்டும் சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெறும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பக்திப் பெருக்குடன் நடராஜரை வழிபட்டுச் செல்கின்றனர்.