ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், தன்னுடன் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகப் பழகிய சிலர், தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாகக் கூறி மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னைப் போல் பல பெண்களை இவர்கள் மிரட்டி இதுவரை சுமார் 7.5 லட்சம் ரூபாய் பணம் பறித்திருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகமது முகைதீன், புதுச்சேரியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் நூர், சென்னையைச் சேர்ந்த பாசித் அலி, திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கனியைச் சேர்ந்த பார்டு பைசுல், நாகபட்டினத்தைச் சேர்ந்த முகமது ஜாசிம் உள்ளிட்ட ஆறு பேர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் அறிவுறுத்தலின்படி வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சமூக வலைதளப் பக்கங்கள், வங்கிக் கணக்குகள், இணையதள வங்கி பணப் பரிவர்த்தனைகளை தனிப்படை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
அதில், ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பயின்று வரும் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முகமது முகைதீன் தலைமையிலான கும்பல் ஒன்று, சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகப் பதிவிட்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு பெண்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் நண்பர்களுக்கு சிறிது கமிஷன் அளித்த பின் அவர்களிடமிருந்து மீதமுள்ள மொத்தப் பணமும் முகமது மைதீனின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுவதும் தெரிய வந்தது.
இந்நிலையில், தற்போது இவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசுல் ஆகிய இருவரையும் கைது செய்த தனிப்படை காவல் துறையினர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : அறந்தாங்கி, காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு!