ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே உள்ள சின்னசம்பை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வேலன். இவரது மனைவி பிரியங்கா. இந்நிலையில், பிரியங்கா மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகராஜன் இவரது மனைவி தமிழரசி மற்றும் மூன்று குழந்தைகளும் அரியமான் கடற்கரை செல்வதாக திட்டமிட்டுள்ளனர். இவர்கள் தனியாக காரில் செல்ல, ஆறுமுகவேலன் மற்றும் நாகராஜன் இருசக்கர வாகனத்தில் அரியமான் கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பெருங்குளம் உப்பளம் சேதுபதி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அக்காள்மடம் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஆறுமுக வேலன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த நாகராஜன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கடற்கரைக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டிருந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சரக்கு வாகன ஓட்டுநர் ராஜகண்ணனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 3,581 பேருக்கு கரோனா