ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற இருவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
ராமநாதபுர கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, மஞ்சள், கஞ்சா, புகையிலை உள்ளிட்ட பொருள்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 6) மண்டபம் வனச் சரகர், இந்திய கடலோர காவல்படையினர், கடற்கரைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகினை காவலர்கள் சோதனை செய்தனர்.
சோதனையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை 100 சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மொத்த எடை 2.5 டன் ஆகும்.
இதுதொடர்பாக வேதாளை தெற்குத் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (42), முகமது அன்சார் ஆகிய இருவரை கைது செய்த கடலோர காவல் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கைதானவர்கள் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: கேரள லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேர் கைது!