ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரையில் பணிபுரியும் காவலர் சுரேஷ் மற்றும் அருண்ராஜ் ஆகியோர்கள், ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் பெறலாம் என்ற ஆசையில், ஈரோட்டை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரவீன் குமார், விஸ்வநாதனிடம் பணம் கொடுத்துள்ளனர்.
அதில், சுரேஷ் 49,70,300 ரூபாய், அருண்ராஜ் 7,50,000 ரூபாய் கொடுத்து ஏமாற்றப்பட்டதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் பிரத்யேக தொலைபேசி எண்ணில் புகார் அளித்தனர். அதன் பின்னர் அவர்களை அழைத்த, எஸ்.பி. விசாரணை செய்தார். பின் இது குறித்து, குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மோசடி செய்த இருவரையும் தேடி வந்த நிலையில், இருவரும் ஈரோட்டில் இருப்பது தெரிய வந்து, காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இணையம் வழியாக அதிக பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை குறி வைத்து, இந்த போலி நிறுவனங்கள் மூலமாக மோசடியில் ஈடுபட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் காவல் துறையினர் இவர்களிடமிருந்து 9,70,000 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 25 டெபிட், கிரெடிட் கார்டுகள், 9 மடிக்கணிணிகள், 7 கைப்பேசிகள், 3 பென் டிரைவ்கள், 3 ஓடிஜி மற்றும் ஒரு கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: என்ன ஒரு வில்லத்தனம்...! டாஸ்மாக் கடையை உடைத்து பாட்டில் திருடிய பாய்ஸ்...!