ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் நான்கு வழி சாலைக்கான சுங்க கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சுங்கச்சாவடியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், மதுரை முதல் ராமேஸ்வரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை 49 மதுரை பரமக்குடி வரை மட்டுமே நான்கு வழி சாலை அமைந்துள்ளது. பரமக்குடி முதல் ராமேஸ்வரம் வரை பழைய இருவழி சாலையே உள்ளது. ஆனால் போகலூரில் சுங்கச்சாவடி அமைத்து நான்கு வழிச்சாலைக்கான கட்டணம் வசூல் செய்து வருவதாகவும், இதனால் அவ்வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், வாகன உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டிகள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, சேதுக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் வாடகை கார் நிறுத்தத்திற்கான கட்டணம் முறையற்ற முறையில் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு முறைப்படுத்த வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: வில்சன் கொலை வழக்கு: சிம்கார்டு விற்றவரின் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை!