ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் மிக முக்கியப் பங்காற்றி வரும் பாம்பன் ரயில் பாலம் 100 ஆண்டுகளைக் கடந்த பழமையான கடல் பாலமாக இருந்து வருகிறது.
பாலம் பலவீனமாக இருப்பதால் மையப்பகுதியில் 84 சென்சார்கள் ஐஐடி குழுவினரால் பொருத்தப்பட்டு, தொடர்ந்து அதிலிருந்து எடுக்கப்படும் கணக்கீடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக சென்சாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பழைய சென்சார் மாற்றப்பட்டு, புதிதாக சென்சாரை ஐஐடி குழுவினர் பொருத்தி, ரயில் சோதனை ஓட்டம் நடத்தி, பின் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
சென்சார் மீண்டும் பழுது
இந்நிலையில், தற்போது மீண்டும் சென்சாரின் கணக்கீட்டில் மாறுபாடு காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக ராமேஸ்வரத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டு மண்டபத்திலிருந்து ரயில்கள் இயங்குகின்றன.
ஐஐடி குழுவினர் பாம்பன் பாலத்துக்கு விரைந்து வந்து சென்சாரில் ஏற்பட்டுள்ள பழுதை ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து ரயில்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தில் இருந்து மட்டுமே ரயில்கள் இயக்கம்
ரயில்கள் அனைத்தும் மண்டபத்தில் இருந்து இயங்கும் என்றும்; பாலம் சீரமைக்கும் பணியில் உள்ள அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த பணி முடிந்ததும் பாம்பன் பாலத்தில் ரயில் இன்ஜின் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் அதனை அடுத்து ரயில்கள் இயக்கும் முடிவு எடுக்கப்படும் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.