இராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரண்மனை அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார்.
அப்போது பேசிய அவர், “அரசியல் என்பது வாழ்வியல். பிறப்பு முதல் இறப்பு வரை தீர்மானிப்பது அரசு. அதனால் நமக்கான அரசை உருவாக்குவதற்காக புரட்சிகர அரசியல் போர்க்களத்திற்கு வந்தோம். தடம்பதித்து நடக்க போராடிக்கொண்டுள்ளோம். எங்களை விதைத்தவர்கள் உறங்கிக்கொண்டிருக்க நாங்கள் தினந்தோறும் முளைத்துக்கொண்டு, எழுந்து வருகிறோம்.
சுத்தம் சுகம் என எல்லா சுவரிலும் எழுதியிருந்தாலும், அதை சுத்தம் செய்ய யாரும் இறங்கி வரவில்லை. அதனால் நாங்கள் இறங்கி வந்துவிட்டோம். அனைத்தையும் வாழ்வியல் கருத்துக்களையும் கொட்டி வைத்துச் சென்றவர்கள் முன்னோர்கள். மொழி அழிந்து, ஒழிந்து கொண்டிருப்பதை எப்படி சகித்து கொண்டிருப்பது? தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி. தமிழ் வளம், தமிழர் வளம், நிலவளம், கடல்வளம், மண் வளம், காற்று வளம், காத்து நாம் தமிழர் பிள்ளைகள் வெல்வார்கள். சாதி, மத உணர்ச்சி சதையை வெட்டி இழுக்கும். தமிழ் நூல் உணர்ச்சி கட்டி இழுக்கும்.
இந்தியாவையே பிச்சைக்கார நாடாக பாஜக மாற்றிவிட்டது. எல்ஐசி, விமானம், என எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார்கள். அத்தனை பொதுத்துறை நிறுவனங்களையும் அதானி, அம்பானி என மாற்றி வருகிறார். இரண்டு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரதமர். தமிழர்களை சுட்டுக்கொன்ற இலங்கையை நட்பு நாடு எனக்கூறுவது சரியா? பாஜக, காங்கிரசுக்கு ஒரே கொள்கை தான்” என்றார்.
இதையும் படிங்க...அதிமுக - திமுக வார்த்தைப் போர் முதல் ஜெயக்குமாரின் ரிக்ஷா பயணம் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்