ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது பிறந்தநாள் மற்றும் 58ஆவது நினைவு நாள் நாளை (அக்-30) கொண்டாடப்பட இருக்கிறது. இதற்குத் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்துகின்றனர்.
இதுதவிர எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நேரத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.
இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பசும்பொன் கிராமம் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள், கோபுரங்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூறுகையில், 'பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் வடக்கு மற்றும் தென் மண்டல ஐஜிகள் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 13 டிஎஸ்பி உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ள அறிவிப்பின் அடிப்படையில் ஆட்சியரிடம் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே பசும்பொன் கிராமத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். பசும்பொன் கிராமத்தில் 5 ஆளில்லா பறக்கும் விமானங்கள் மற்றும் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு பணி நேரலை மூலமாக நேரடியாகச் சென்னையிலிருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார்.