ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் முனைக்காடு கடற்பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக இறால் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சி குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருகிறது. இதனால் இறால் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து கடலில் விட்டு இறால் வளத்தை பெருக்கும் முயற்சியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டு வருகிறது.
இதனால் இறால் வளத்தை தக்கவைத்து கொள்ளவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இதன் மூலம் மீனவர்களுக்குத் தேவையான இறால்களை வளர்ந்ததும் பிடித்துக் கொள்ள முடியும்.
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் 1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு கடலில் விடப்படும் இறால்மீன் குஞ்சுகள் 5 மாதங்களில் உரிய வளர்ச்சியைப் பெறும். இவற்றை மீனவர்கள் பிடித்துப் பயன்பெறலாம்'' என்றார்.
இதையும் படிங்க: தங்கச்சிமடம் அருகே 10 லட்சம் பச்சை புலி இறால் குஞ்சிகள் கடலில் விடப்பட்டன!