ராமநாதபுரம்: கீழக்கரை வண்ணந்தரவை ஈபி அலுவலகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, செப்.9ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், பயங்கர ஆயுதங்களை காட்டி ஊழியர்களை மிரட்டி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விசாரணையை துரிதப்படுத்த கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷிதம் உத்தரவிட்டிருந்தார். கீழக்கரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் முனியாண்டி உள்ளிட்ட காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சின்ன மாயாகுளத்தைச் சேர்ந்த ராஜேஷ் (21), கீழக்கரையைச் சேர்ந்த நிர்மல் ராஜ் (21), பாலமுருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், பெட்ரோல் பங்க்கில் ஆயுதம் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டனர்.
கொள்ளையர்கள் கைது
மேலும் கொள்ளையடித்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில் இரண்டு இருசக்கர வாகனங்கள், உயர் ரக செல்போன்கள் உள்ளிட்டவை வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து, அனைத்து பொருள்களையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், இவர்கள் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கர ஆயுதங்களை காட்டி கொள்ளையடித்த குற்றவாளிகளை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த கீழக்கரை காவல் துறை அலுவலர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாடி மேம்பாலத்தின் கீழ் கத்திமுனையில் அடுத்தடுத்து கொள்ளை: மக்கள் பீதி