குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”டெல்லியில் நடைபெற்ற கலவரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
டெல்லி வன்முறைக்குக் காரணமான கபில் மிஸ்ரா உள்பட அனைத்து அரசியல் பிரமுகர்களையும் கைதுசெய்வதற்கு ஏதுவாக, இந்தப் புலனாய்வுக் குழு விசாரணை அமைய வேண்டும். மதத்தின் அடிப்படையில் இந்தச் சமூகத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியை மோடி அரசு திட்டமிட்டு செயல்படுத்திவருகிறது. அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமானால், பாஜகவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சி.ஏ.ஏ.விற்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என்.பி.ஆர்., சி.ஏ.ஏ. உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அதிமுக துணிந்து முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லி கலவரம் : மேலும் இரண்டு பேர் கைது!