தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கிராமப்புறங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இங்கு முகாமில் காய்ச்சல் சோதனை, கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தனது இரண்டாவது தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " ராமநாதபுரம் மாவட்டத்தில் 707 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 66 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக கரோனா தொற்றுக்கான தொடர் சங்கிலி அறுபட வேண்டுமானால், பொதுமக்கள் அதற்கு போதிய ஒத்துழைப்பை தர வேண்டும். எனவே திருமணம் மற்றும் விசேஷங்களில் அரசு விதிமுறைப்படி 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.
மாவட்டத்தில் தற்போது வரை நோய்த் தடுப்பு ஊசி மருந்து தட்டுப்பாடு இல்லை. மேலும் தேவையான அளவில் அதன் இருப்பு உள்ளது. அதேபோல மாவட்டத்தில் தேவையான ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜனுடன் 2000 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.