ராமநாதபுரம் அருகில் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர் கடந்த நவ. 8ஆம் தேதி அரபு நாடான துபாய் நாட்டிற்கு ஒரு தனியார் கட்டட கம்பெனிக்கு கூலித் தொழிலாளியாகப் பணிக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த நவ. 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் பணி செய்துவிட்டு அவரது அறையில் தூங்கிவிட்டு வெளியில் சென்றவரை இதுவரை காணவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பதும் இதுவரை தெரியவில்லை எனவும், இதுவரையில் தொலைபேசியில்கூட தொடர்பு கொள்ளவில்லை என்றும், இதனால், தங்களுக்கு மிகவும் பயமாகவும் இருக்கிறதெனவும், அமிர்தலிங்கத்தின் மனைவி முனீஸ்வரி வேதனை தெரிவித்தார். மேலும், துபாயில் உள்ள தங்கள் உறவினர்கள் மூலமாக பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனால் தனது கணவரை அங்கிருந்து மீட்டு கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டும் என, அமிர்தலிங்கத்தின் மனைவி முனீஸ்வரி தங்கள் குடும்பத்துடன் வந்து துபாய் நாட்டிலுள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு பரிந்துரை செய்து அவரது கணவரை தாயகம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.