ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில், மேலபார்த்திபனூர், நெல்மடூர் ஊராட்சிகள் அமைந்துள்ளன. மேலபார்த்திபனூர் ஊராட்சியில் ஏராளமான வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மக்கள் தொகையும் 50 ஆயிரமாக உள்ளது. அவ்வூராட்சியில், பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், தாங்கள் சேகரிக்கும் குப்பைகளைத் தரம்பிரிக்காமல் அருகிலுள்ள நெல்மடூர் கிராமத்தில் வரத்துக் கால்வாய்களில் கொட்டுகின்றனர்.
இந்தக் குப்பைகளை, நாய்கள், பன்றிகள், கோழிகள் கிளறி அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் சிலரும் அக்குப்பைகளுக்கு அவ்வப்போது தீ வைத்துவிடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளிப்பதோடு, மக்களுக்கு கண் எரிச்சல், தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு வருவாய்த் துறை உடனடியாக இடம் ஒதுக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீர் மாசடையாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதே நிலை நீடித்தால், கிராம மக்கள் அனைவருக்கும் தொற்று நோய்கள் ஏற்படுவதோடு கண்மாய்களில் தண்ணீர் தேங்குவது கேள்விக்குறியாகிவிடும் என விவசாயிகள் புலம்புகின்றனர்.
எனவே, பருவமழை தொடங்கும் முன்பு நெல்மடூரில் கொட்டப்பட்டுள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ‘காணொளி காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்துக!’ - தினகரன் ட்வீட்