பள்ளி, கல்லூரிகள் விடுமுறையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சித்தரதுர்க்கா மாவட்டத்திலுள்ள நிஜலிங்கப்பா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரிக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளனர். அப்போது தனுஷ்கோடியை அடுத்துள்ள அரிச்சல்முனை கடல் பகுதியில் மாணவர்கள் அனைவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.
ஆசிரியர்கள் எச்சரிக்கையையும் மீறி மாணவர்கள் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது கடலின் நீரோட்டம் அதிகரித்ததால், பிரிஜ்வாலா என்ற மாணவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.
இந்தத் தகவலறிந்த அப்பகுதி மீனவர்கள் மாணவரைத் தேடியும் கிடைக்காததால், தீயணைப்பு வீரர்கள், தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவரை தீவிரமாக தேடும் பணியில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் சக மாணவர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா வந்தவர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லட்சக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகள் கோவையில் பறிமுதல்!