ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதியான ரோமன் சர்ச் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வங்கி (KVB) பல வருடங்களாக இயங்கி வருகிறது.
அந்த வங்கியுடன் சேர்த்து பணம் டெபாசிட் (இடும்) இயந்திரம், பணம் எடுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட மூன்று இயந்திரங்கள் அடங்கிய தானியங்கி மையம் உள்ளன.
இந்த மையம் 24 மணி நேர சேவை மையம் ஆகும். இதில், 24 மணி நேரம் காவலாளிகள் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி இரவு ஒரு மணி அளவில் ராமநாதபுரம் வீரபத்ர சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த 50வயதுடைய ருத்ரபதி என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது, அங்கு தலைக்கவசம், ஆயுதத்துடன் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து காவலாளி ருத்ரபதியிடம் உடனடியாக சிசிடிவி கேமரா, மின் விளக்குகளை அணைக்கச் சொல்லியும் ஆயுதத்தை கொண்டு தாக்க முற்படுகிறான் .
அதற்கு காவலாளி மறுக்கவே காவலாளிக்கும் கொள்ளையனுக்கும் இடையே 15 நிமிடம் போராட்டம் நடக்கிறது. பின்னர் காவலாளியின் துரித முயற்சியால் கொள்ளையனின் கையிலிருந்த ஆயுதம் பிடுங்கப்பட்டு தலைக்கவசமும் அகற்றப்பட்டவுடன் காவலாளியை சமாளிக்க முடியாமல் கொள்ளையன் தப்பி ஓடி விடுகிறான்.
காவலாளியின் சாமர்த்தியத்தால் ஏடிஎம் மையத்திற்குள் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் துரிதமாக செயல்பட்ட காவலாளியை வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். முழுக்க முழுக்க வங்கி காவலாளியின் திறமையினால் இந்தக் கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் சண்டையிட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரை அழைத்து பாராட்டியதோடு வங்கியின் சார்பாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் சன்மானம் அளித்தார்.
இதையும் படிங்க: திருடனை விரட்டியடித்த காவலாளி - சிசிடிவி வெளியீடு