ராமநாதபுரம்: ராமேஸ்வரம் லெட்சுமண தீர்த்தம் அருகிலுள்ள வர்த்தினி தனியார் மண்டபத்தில் வைத்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 5ஆவது மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் செலஸ்டின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சிவாஜி தொடக்க உரையாற்றினார். சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், மீன்பிடி தொழிற்சங்கத்தின் அகில இந்திய செயலாளர் புள்ளுவிளை ஸ்டான்லி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த மாநாட்டில் தேசிய கடல் மீன்வள மசோதாவை, ஒன்றிய அரசு நிறைவேற்றக் கூடாது, விசை படகுகளுக்கு ஆண்டுக்கு மானிய டீசலை 40 ஆயிரம் லிட்டராகவும், நாட்டு படகுகளுக்கு ஆண்டுக்கு மானிய டீசலை 6000 லிட்டராகவும், மானிய மண்ணெண்ணெயை 6,000 லிட்டராக உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அது போல மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 5 ஆயிரத்தை, ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், முன்பு தமிழ்நாடு அரசின் ராயபுரம் மற்றும் கிண்டியில் இயங்கிய வலை பின்னும் ஆலைகள் மூலம் மீனவர்களுக்கு வலைகள் வழங்கப்பட்டதை போல, புதிய வலை பின்னும் ஆலைகளை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.