பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
அச்சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே இருந்து ஊர்வலமாக வந்த அவர்களை காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் தடுத்து நிறுத்தினர்.
இதனால், காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி காத்திருப்புப் போராட்டத்தை செய்துவருகின்றனர்.
போராட்டம் குறித்துப் பேசிய மயில்வாகனன், காப்பீட்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்களுடன் பேசிவைத்தும் பல்வேறு காரணங்களை கூறியும் காப்பீட்டுத் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
![ramanathapuram farmers recent protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-01-tamilnadu-farmer-union-occupied-collector-office-pending-crop-insurance-visual-script-7204441_05102020123329_0510f_00708_587.jpg)
2018-19ஆம் ஆண்டு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகைக்கு பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை இதுவரை வரவில்லை என்றார்.
இதையும் படிங்க: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள்: விவசாயிகள் அதிர்ச்சி