தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் ராமநாதபுரம் சேதுபதி சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, பெண்களுக்கான 200 மீ., ஓட்டப்பந்தயம் கடந்த நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மைதனாத்தினுள் மழைநீர் தேங்கி நின்றதால், தேர்வுகள் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றப்பட்டன.
பின்னர் அங்கும் மழைநீர் தேங்கியதால் அவை சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்திலேயே மீண்டும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அதில் பங்கேற்ற பெண்களில் 35 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மழையால் தங்கள் தேர்வு பாதிக்கப்பட்டதாக மனுத்தாக்கல் செய்தனர்.
அதனடிப்படையில், அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வாய்ப்பளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின், உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற 35 பெண்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுறுத்தல்படி, கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ் முன்னிலையில் சான்றுகள் சரிபார்க்கப்பட்டன.
இதையும் படிங்க: