ராமநாதபுரம்: உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்ல மாணவியர் 38 பேர் ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை, கீழடி அகழ்வைப்பகம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாத்துறை மூலம் ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சுற்றுலாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் மாவட்ட சுற்றுலா அலுவலர் (முகூபொ) கு.அருண் பிரசாத் உள்ளிட்ட பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தென்னிந்தியாவிலேயே முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு, கோயில் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட ராமலிங்கவிலாசம் அரண்மனைக்கு மாணவியர் அனைவரும் சென்றபோது, ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் சேதுபதி மன்னர்கள் பற்றி அவர்களுடன் உரையாடினர்.
தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு இங்குள்ள ஓவியங்களின் அமைப்பு, இயற்கையான மூலிகை வண்ணத்தில் அவை உருவான விதம், ராமாயாண, பாகவத காட்சிகள், சேதுபதிகள் வணங்கிய தெய்வங்களின் உருவங்கள், தஞ்சை மராட்டியர்களுடனான போர்க்காட்சிகள், மன்னர் பவனி வருதல் போன்ற சிறப்புமிக்க ஓவியங்கள் குறித்து விளக்கினார்.
மேலும், கி.பி.18ஆம் நூற்றாண்டில் இருந்த மக்களின் ஆடை, அணிகலன்கள், காலணி, முக, உடல் அலங்காரங்கள், பயன்படுத்திய ஆயுதங்கள், போர் முறைகள் பற்றியும் ஓவியங்களைக் காட்டி விளக்கினார். ஓவியப் பெண்களின் அலங்காரமும், பெண்களைக் கொண்டு யானை, குதிரையை உருவாக்கிய விதமும் தங்களைக் கவர்ந்ததாகவும், அழகான இந்த ஓவியங்கள் 18ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள உதவியதாகவும் மாணவியர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாட்டு பாடி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள்; பேச்சுவார்த்தைக்குப் பிறகும் போராட்டம் தொடர்வதாக அறிவிப்பு!