ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று குறைவதால், இன்று (செப்.1) முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 264 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 64,753 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு ஆயிரத்து 543 ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இன்று (செப்.1) பணிக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து மாவட்டத்திலுள்ள 40 கலை அறிவியல், பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு மாணவர்கள் வருகை புரிந்தனர்.
முகக்கவசம் அணிவதில் அலட்சியம்
பெரும்பாலான மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தாலும், பலர் பள்ளி வளாகத்திற்கு நுழைவதற்கு முன்பு வரை முகக்கவசம் அணியாமல், பள்ளிக்குள் நுழையும்போது முகக்கவசத்தை அணிந்து செல்கின்றனர். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
மாணவர்களுக்கு முறையாக அறிவுரை வழங்கி முகக் கவசத்தையும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது முக்கியம் என்பதை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உணர்த்த வேண்டும்.
ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் வீதம் பிரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளி, தண்ணீர், உணவை மற்றவரிடம் வாங்காமல் இருக்க வேண்டுமென தலைமை ஆசிரியர் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு