ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து நேற்று (டிச. 14) காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர். இவர்கள் பகல் 2 மணி அளவில் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஆறுக்கும் மேற்பட்ட இலங்கை ரோந்து கப்பல்கள் வந்தன.
அவர்கள் மீனவர்களை அப்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் எச்சரித்து விரட்டியடித்தனர். இதையடுத்து, இலங்கை கடற்படையினர் தங்களைச் சிறைப்பிடிக்கக்கூடும் என்ற அச்சத்தில் மீனவர்கள் அனைவரும் நான்கு திசைகளிலும் சிதறிச் சென்றுள்ளனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆரோக்கியகுருஸ், சிம்சன், சுரேஷ், சத்தியா ஆகியோரது படகில் சென்ற நம்பு, பாலமுருகன், சூசை இடிட்டோ, நெல்சன், முனியசாமி, குமரேசன், அசோக் உள்ளிட்ட 20 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்து, அவர்களது படகுகளை பறிமுதல்செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், இந்திய விசைப்படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களை அழித்துவருவதாக இலங்கை மீனவர்களின் காணொலி ஆதரங்களுடன் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்தே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பிலுள்ள உயர் அலுவலர்களின் உத்தரவுக்குப் பின்னரே கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா அல்லது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது தெரியும் என கைதுசெய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் நிலை குறித்து இலங்கை பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதை அறிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சக மீனவர்கள் அச்சத்துடனே கரை திரும்பியுள்ளனர். மேலும் கரை திரும்பிய மீனவர்களிடம் பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடல் முழுவதும் இலங்கை ராணுவ கப்பல்கள் அணிவகுத்து நின்று அச்சுறுத்துவதாக கரை திரும்பியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தலால் நாளை ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
இதில் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் எவ்வித பிரச்னையும் இன்றி மீன்பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: வரம்பு மீறி மீனவர்கள் மீது தாக்குதல்; இலங்கை கடற்படை அட்டூழியம்!