ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியில் ஐஎன்எஸ்க்கு சொந்தமான ஹெலிகாப்டர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் இலங்கைக்குச் சொந்தமான ஃபைபர் படகு ஒன்று வருவதைக் கண்டறிந்தனர்.
பின்னர் அந்தப் படகை அரிச்சல்முனை கடற்கரைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கடலோரப் பாதுகாப்பு குழுமம், ராமேஸ்வரம் கியூ பிரிவு ஆய்வாளர்கள் அரிச்சல் முனைக்கு வந்த இலங்கை ஃபைபர் படகு மற்றும் அதிலிருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஸ்டீபன்ராஜ், இயேசு ராஜா, உதயகுமார், ரவீந்திரன், ரெக்சன் ஆகிய 5 நபர்கள் என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, ஐந்து பேரையும் மண்டபம் கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தங்கக் கடத்தலில் ஈடுபடுவதற்காக அரிச்சல்முனைக்கு வந்தார்களா? அல்லது வழிமாறி வந்தார்களா என தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் இதே போல் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களிடம் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:லாரியில் கடத்தப்பட்ட 308 கிலோ கஞ்சா: இருவர் கைது!