ராமநாதபுரம் நகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல் துறையினர் இரவு நேரத்தில் ரோந்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் காருடன் நின்றிருந்த ஆறு பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர்கள் ஆறு பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அங்கு நின்ற காரை சோதனையிட்டனர்.
அப்போது அதில் கை உறை, முகம் மறைக்கும் தொப்பி, கத்தி, அரிவாள், இரும்பு கம்பி ஆகியவை இருந்தது தெரியவந்தது.
திருட்டு கும்பல்
இதையடுத்து காரை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஆறு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கீழக்கரையைச் சேர்ந்த செய்யது முகம்து பக்கீர், வேலூரைச் சேர்ந்த ரஹீம், பார்த்திபன், கார்த்திக், இப்ராகிம், ராபர்ட் ஜான் கென்னடி என்பது தெரியவந்தது.
சொந்த ஊரான கீழக்கரையில் வேலை இடத்தில் கையாடல் செய்த செய்யது முகமது பக்கீர் இங்கிருந்து வேலை தேடி வேலூருக்குச் சென்றுள்ளார். சென்ற இடத்தில் இந்த திருட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை
இதனையடுத்து, செய்யது முகமது பக்கீர் வேலூர் கும்பலுடன் கூட்டு சேர்ந்து கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்து கீழக்கரை உள்ளிட்ட இடங்களில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்த பஜார் காவல் நிலைய காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஷட்டரை உடைத்து கொள்ளையடிக்கும் முதியவர் கைது!