ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான குந்துகால் துறைமுகப் பகுதி ,குருசடை தீவு ஆகிய பகுதிகளில் நேற்று கடல் பச்சை நிறமாக காட்சியளித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விஞ்ஞானிகள் குழுவினர் பச்சை நிறமாக மாறியிருந்த கடல் நீரை சோதனையிட்டனர்.
கடல்நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகள் கூறியதாவது; 'ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை தென்கடல் பகுதியில் 'ஆல்கல் புளூம்' எனும் கண்ணுக்கு தெரியாத கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகி கடலில் படரும். அப்போது, கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். இந்தக் கடல் பாசியை பூங்கோரை என மீனவர்கள் அழைப்பர். அந்த பாசியானது கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, மீன்கள் இறக்கின்றன்' இவ்வாறு கூறினர்.