இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரை அருகே உள்ள திருப்பாலைக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இந்திய அஞ்சல் வங்கி உள்ளது. நேற்று முன்தினம் (17.9.19 அன்று) அடையாளம் தெரியாத நபர்களால் இந்த இரண்டு வங்கிகளின் வாயில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போல் நேற்று (18.9.19) காலை அப்பகுதி மக்கள் அவ்வழியாக சென்ற போது வங்கி மற்றும் அஞ்சலக கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகலவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூட்டு உடைக்கப்பட்டுள்ள இரண்டு வங்கிகளிலும் ஏதேனும் திருடு போய் உள்ளதா என ஆய்வு செய்தனர். கொள்ளை முயற்சியில் அதிர்ஷ்டவசமாக கோடிக்கணக்கான நகைகள் பணம் மற்றும் பத்திரங்கள் தப்பியது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், நேற்று மாலை நேரத்தில் சந்தேகம் படும்படி மூன்று நபர்கள் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மூன்றுபேரில் இரண்டு பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இருவரும் உப்பூர் அணல்மின் நிலையத்தில் பணி புரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நிகழ்ந்த இடங்களில் கை ரேகைகளை சோதனை செய்து வருகின்றனர்.