சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் தேர்தலுக்கான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் சோதனைச்சாவடி அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தையும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஒரு தொகுதிக்கு மூன்று வீதம், 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
12 நிலைத்த கண்காணிப்புக் குழுக்கள், ஒரு தொகுதிக்கு ஒரு காணொலி கண்காணிப்புக் குழு என 28 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும், மேலும் தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் புகைப்படம், காணொலியுடன் புகார் செய்யும் வகையில் cvigil என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்