ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு ஆயிரத்து 64 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், மூன்று ஆயிரத்து 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 502 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 89 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராமநாதபுரத்தை அடுத்த சோக்கையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 8 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இன்று அவர் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் உடலை பெற்று சென்றனர்.