இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்களை இன்று (ஜன.23) இந்திய கடற்படையினர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். அங்கு அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மீனவர்களின் உடல்கள் ராமநாதபுரத்திற்கு கொண்டுவரப்பட்டன.
உயிரிழந்த செந்தில்குமார், நாகராஜ், சாம்சங், மெசியா ஆகிய நான்கு மீனவர்களின் உடலுக்கும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து நான்கு மீனவர்களின் உடல்களும் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மெசியா என்ற மீனவரின் உடல் நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறி மீனவர்கள், உறவினர்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சாலை மறியல் தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு, நான்கு மீனவர்களின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:இலங்கையில் கொல்லப்பட்ட மீனவர்களின் உடலுக்கு தமிழகத்தில் அஞ்சலி