ஒரு காலத்தில் செழிப்பாக வாழ்ந்த ராமநாதபுரம் மக்கள்
ராமநாதபுரம் என்றவுடன் நம் அனைவரின் நினைவிற்கு வருவது தண்ணீர் பஞ்சம், வறட்சி, சுட்டெரிக்கும் வெயில் உள்ளிட்ட எதிர்மறையான விஷயங்கள்தான். ஆனால் கடந்த காலங்களில் அம்மாவட்டத்தில் வேளாண்மை நல்லமுறையில் நடைபெற்று மக்கள் மிகவும் செழிப்புடன் வாழ்ந்துவந்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றிய பருவமழை
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழை, தென்கிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதன் விளைவு ராமநாதபுரத்தில் விவசாய முற்றிலுமாக கீழ்நோக்கிச் சென்றது. அம்மாவட்டத்தில் உள்ள கமுதி, கடலாடி, பரமக்குடி, திருவாடானை, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிக அளவில் இருக்கின்றன. சுமார் 1.25 ஹெக்டேருக்கு மேல் விவசாயம் நடைபெற்றுவருகிறது.
இதில் பெரும்பாலான பகுதிகளில் நெல் விவசாயம் நடைபெற்றுவருகின்றது. ராமநாதபுரத்தில் பெய்ய வேண்டிய மழை கடந்த ஐந்து ஆண்டுகளாக சரிவர பெய்யாததன் காரணமாகவே பல விவசாயிகள் கடனுக்கு ஆட்பட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
மேலும் ராமநாதபுரத்தில் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாமல் கிடப்பில் கிடந்தன. வரத்து கால்வாய்களை சரிவர பராமரிக்காததும் இதனால் வயலுக்குச் செல்லும் வழியில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீர் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் விளை நிலத்திற்கு நீர் போய்ச் சேரவில்லை. இதுவும் விவசாயம் பெருமளவு பாதித்ததற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இந்தாண்டு வேளாண்மை செழிப்படை அதிக வாய்ப்பு
கடந்த காலங்களில் மழைப்பொழிவு எப்பொழுதும் கடலோரப் பகுதிகளில் அதாவது ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே இருக்கும். மாவட்டத்தின் விவசாய நிலப்பகுதியில் மழைப்பொழிவு பெருமளவு இருக்காது. இதுவே முக்கியக் காரணம் விவசாயம் பொய்த்ததற்கு... ஆனால், இந்த ஆண்டு மாவட்டத்தின் விவசாயம் நடைபெறும் பகுதிகளான கமுதி, கடலாடி உள்ளிட்டவை மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் நீர் நிறைந்து காணப்படுகின்றன. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டும் விவசாயம் செழிக்க அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும், கண்மாய்களில் நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான பணிகளைத் துரிதப்படுத்தியதன் காரணமாக தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்கள் நிரம்பிவருகின்றன.
மழைப்பொழிவு இருந்து என்ன பயன்? - விவசாயிகளின் விதி விதிப்படிதான்...!
மழைப்பொழிவு அதிகளவில் இருந்தாலும் இந்த ஆண்டு விவசாயிகள் பயிரைக் காப்பாற்ற வேறு விதமான பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர். குறிப்பிட்ட பயிர்களுக்கு கால இடைவெளியில் தூவப்படும் யூரியா உரம் மாவட்டம் முழுமைக்கு தட்டுப்பாடாக உள்ளது. இதன் காரணமாக பெருவாரியான விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற போராடிவருகின்றனர். மேலும் அவர்கள் 500 முதல் 600 ரூபாய் வரை கொடுத்து தனியாரிடமfருந்து யூரியா வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.
இது குறித்து ராமநாதபுரம் வேளாண் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வர வேண்டிய உரம் சில காரணங்களால் வேறு மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது. தற்பொழுது உரம் தேவை அதிகமாக உள்ளது. விரைவில் பெரிய அளவிலான உரம் ராமநாதபுரத்திற்கு வந்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். பிறகு உரத் தட்டுப்பாடு நீங்கி விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ராமநாதபுரம் புதிய எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்பு!