ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,691 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ராமநாதபுரத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் திமுக பெருவாரியான இடங்களை பிடித்துள்ளது. மாவட்ட கவுன்சிலர்கள் பொறுத்தவரையிலும் திமுகவே அதிக வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பேசுகையில், ”இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு பின்னடைவு இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 18 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் 33 விழுக்காடு வரை வாக்குகள் உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு தற்போதும் செல்வாக்கு அப்படியே உள்ளது. இதனால், அதிமுக மீண்டும் தனது வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் பெருவாரியாக அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. இதனிடையே, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் அதிமுக சார்பாக யாரும் போட்டியிட முன் வராததால் தோல்வி அடைவார்கள் என்று தெரிந்தே பனைக்குளம் இரண்டாவது வார்டில் எனது மகளையும், வேதளையில் மகனையும் தேர்தலில் நிறுத்தினேன்.
இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் அனைத்து பதவிகளையும் கைப்பற்றலாம் என்ற திமுகவின் எண்ணத்தை வாக்காளர்கள் சுக்குநூறாக உடைத்துள்ளனர். அதிமுகவிற்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பதை இந்த தேர்தல் நிரூபித்ததுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுக அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என துணை முதலமைச்சர், முதலமைச்சரிடம் தெரியப்படுத்தினேன். இது தொடர்பாக அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க:
உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக முன்னாள் எம்.பி.யின் மகன், மகள் தோல்வி!