இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி கிளைகளின் மூலம், 2021-22ஆம் ஆண்டில் வளம் சார்ந்த கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ. 4706.78 கோடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு நடப்பு 2020-21ஆம் ஆண்டு இலக்கைவிட 10.25 விழுக்காடு அதிகம்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான அரசின் உந்துதலை கருத்தில்கொண்டு, விவசாய உற்பத்தியை ஒருங்கிணைத்தல் என்பதை அடிப்படையாகக் கொண்டு விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகள் மேம்படுத்திட வேளாண்மை பணிகளுக்கு அதிகளவில் கடனுதவி வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பண்ணை விளைபொருட்களை ஒருங்கிணைத்தல், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தை இணைப்புகளுக்கான கூட்டு முயற்சிகள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்திட வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 2021-22ஆம் ஆண்டில் வேளாண் பயிர் கடன் ரூ. 3049.68 கோடிகளாகவும், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணை தொழில்களுக்கான கடன் ரூ. 351.19 கோடிகளாகவும், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ. 193.11 கோடிகளாகவும், விவசாய கட்டமைப்புகள், ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் மற்றும் மீள்சக்தி ஆகியவற்றுக்கு முறையே ரூ. 149.10, 38.00, 304.00, 344 மற்றும் 22.42 கோடிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.