ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 900 கோடி ரூபாய்க்கு மேல் பயிர்காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
2018–19ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டுத்தொகை முதல் தவணையாக ரூ.175.10 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு ரூ.100 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், திருவாடானை ஒன்றியம் அஞ்சுக்கோட்டை கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவிற்கு விவசாய நிலங்கள் இருக்கும் நிலையில், 400 ஏக்கருக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மாவட்டத்தில் பல இடங்களில் பயிர்காப்பீடு திட்டத்தில் விதிமுறைகளை மீறிப் பதிவு செய்து காப்பீடுத் தொகை பெற்றது குறித்து நிறைய புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில், பதிவிற்கு உதவிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காப்பீடு தொகை நிறுவனம் அளிக்கும் புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறாயிரத்து 350 பேரின் காப்பீடு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அதை விசாரித்துவருகிறோம் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதையும் படிங்க: பள்ளிச் சத்துணவு திட்டத்தில் மாற்றமா? - சமூகநலத்துறை ஆலோசனை!