ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றிப் பார்ப்பதற்காக வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் வேனில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் வடமாநிலப் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து, வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்வதற்காக ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், அனைவரும் சாமி சரிசனத்தை முடித்த பின்னர், தனுஷ்கோடி பகுதியில் சுற்றி உள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்க உள்ளூரில் இருந்து வாடகை வேன் மூலம் சென்றுள்ளனர்.
அப்போது கோதண்டராமர் கோயில் அருகே சுற்றி பார்க்க வந்த மற்றொரு வேணுடன், இங்கிருந்து சென்ற வடமாநில பக்தர்களின் வேன் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மனோபாய் (42) என்பவரும், மற்றொரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் மேல் சிகிச்சைக்காக தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தனுஷ்கோடி போலீசார், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சாமி தரிசனத்திற்காக வட மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.