ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெற்று கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தி வலைகளை வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், நான்கு விசைப்படகுகளையும் அதில் இருந்த 29 மீனவர்களையும் கைதுசெய்து காங்கேசன் துறைமுகம் அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், கரை திரும்பியவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். மீனவ சங்கத் தலைவர் எமரிட் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இரண்டு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நான்கு விசைப்படகளையும் அதிலிருந்த 29 மீனவர்களையும் விடுதலைசெய்ய மத்திய, மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை என்றால் அனைத்து மீனவர்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கடல் முழுவதும் இலங்கை கடற்படை: அச்சத்தில் இரவோடு இரவாக கரை திரும்பிய மீனவர்கள்