ராமேஸ்வரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 6 விசைப் படகுகளையும் 40 மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று (டிச. 26) 13ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்துவருகிறது.
ராமேஸ்வரம், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறு படகுகளையும், 40 மீனவர்களையும் கைதுசெய்ததைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடந்த 15ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் நான்கு கோடி என இன்றுவரை சுமார் 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம் பகுதியில் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்கள், மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் பரிதவித்துவருகின்றனர்.