ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இன்று எண்ணப்பட்டன. அதில், 1.23 கோடி ரூபாய்க்கு மேல் வருவாயாக கிடைத்துள்ளது. தை அமாவாசை மற்றும் ஜயப்ப பக்தர்களின் வருகை என கடந்த 28 நாட்களில் அதிகமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை செலுத்தினர்.
கோயில் உண்டியல்கள் நிறைந்ததால் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள், பஞ்ச மூர்த்திகள் சன்னதிகள் முன் உண்டியல்கள் மற்றும் உப கோயில்களின் உண்டியல் அனைத்தும் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், சிவ தொண்டர்கள், கோயில் ஊழியர்கள், பள்ளி மாணவ - மாணவிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கோயில் கல்யாண மண்டபம் கொண்டு வரப்பட்ட காணிக்கைகள் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடி 23 லட்சத்து 45 ஆயிரத்து 774 ரொக்கம், 64 கிராம் தங்கம், 2 கிலோ 822 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை காணிக்கையாகக் கிடைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறையால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: செங்கோட்டையனை நேரில் சந்தித்து மா. கம்யூ மனு