ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா, 57ஆவது குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் எட்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கொட்டும் மழையில் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர், எம்ஜிஆர் காலத்தில்தான் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்தார் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என்ற அவரின் கொள்கையாலே அவர் தெய்வத்திருமகனார் என்று அழைக்கப்பட்டார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் மக்களுக்கு செய்த சேவை இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் நிற்கிறது’ என்றார்.
இதையும் படிங்க: பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு