ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 கிராமங்களுக்கு மகசூல் இழப்பு பயிர் காப்பீட்டுத் தொகையில் 25 விழுக்காடு மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 75 விழுக்காடு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டத்தின் 117 கிராமங்களுக்கு வழங்கப்படும் மகசூல் இழப்பீடு பயிர் காப்பீட்டுத் தொகை, எந்தவித ஒப்புதலுமின்றி 25 விழுக்காடு மட்டும் நேரடியாகப் பயனாளிகளின் கணக்குகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள 75 விழுக்காடு காப்பீட்டுத் தொகை இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது. எனவே மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தை வலியுறுத்தி மீதமுள்ள 75 விழுக்காடு காப்பீட்டுத் தொகையை ராமநாதபுரம் மாவட்டத்தின் 117 கிராமங்களுக்கு உடனடியாக வழங்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.