ராமநாதபுரம் மாவட்டம், மாடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் ஓய்வூதிய பணத்திற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தார்.
இவர் பலமுறை அலைந்தும் ஓய்வூதியப் பணம் கிடைக்காததால், 1000 ரூபாய் கொடுத்தால் அதனை பெற்றுத் தருவதாக மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் மாரி என்பவர் கூறியதாகத் தெரிகிறது.
அதை நம்பி தங்கராஜூம் 1000 ரூபாய் பணத்தை மாரியிடம் கொடுத்துள்ளார். எனினும், அவருக்கு ஓய்வூதிய பணம் கிடைக்கவில்லை.
பின்னர், தனக்கு இரு மகன்கள், ஒரு மகள் இருப்பதால் தன்னுடைய ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த நாகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்திற்கு வந்திருந்தார்.
இதையும் வாசிங்க : 'ரஜினியை விட திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர்' - கொந்தளித்த சீமான்!
அங்கு ஆட்சியர் வீர ராகவ ராவை சந்தித்துப் பேசிய தங்கராஜ், தனக்கு ஓய்வூதியப் பணம் இன்னும் வழங்கப்படவில்லை அதனைப் பெறுவதற்காக அரசு அலுவலருக்கு 1000 ரூபாய் கொடுத்ததாகவும் அதனை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என முறையிட்டார்.
இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர், தங்கராஜின் 1000 ரூபாய் பணத்தை உடனடியாக அவருக்கு திருப்பி அளிக்க நகராட்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தான் வாங்கிய லஞ்ச பணத்தை மாவட்ட நகராட்சி அலுவலர் மாரி, ஆட்சியர் முன்னிலையில் தங்கராஜிடம் வழங்கினார்.
இந்தச் சம்பவம் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
"உங்களுக்கு தகுதி இருந்தால் ஓய்வுக்கான பணம் கிடைக்கும், எப்போதும் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள். அப்படி யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் என்னிடம் வந்து முறையிடுங்கள்" என தங்கராஜை அறிவுறுத்திய ஆட்சியர், பொதுமக்களிடமிருந்து அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கக்கூடாது எனவும் எச்சரித்தார்.
பிறகு, இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வீர ராகவ ராவிடம் தொலைப்பேசி மூலம் கேட்டபோது , "இருவர் செய்ததும் தவறு, லஞ்சம் கொடுப்பது பெறுவது இரண்டுமே தவறு. பெரியவர் ஓய்வூதியம் பெறப் பணம் கொடுத்துள்ளார். அவரிடம் 1000 ரூபாய் பணம் வாங்கிய அரசு அலுவலர் மாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் வாசிங்க : 'பால் தாக்கரே இருந்தால் இத்தனை தைரியம் வருமா?' பாஜகவுக்கு ரோஹித் பவார் கேள்வி!