ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொழிலாளர்களாக கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வேலை செய்துகின்றனர். தினக்கூலி அடிப்படையில் வேலை செய்வதோடு ஆறு மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊர் வந்து செல்வர்.
விசைப்படகில் 11 பேர் பயணம்
அங்கு, முத்துப்பேட்டை அருகேவுள்ள மேட்டுகாரான் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கண்ணதாசன் (50) என்பவர் வேலை செய்து வந்தார். ஜூலை 29ஆம் தேதி ஊரில் இருந்து மங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 07) காலை 11 மணிக்கு மங்களூரு கடற்கரையில் இருந்து ஒரு விசைப்படகில் 11 பேர் கடலில் சென்றனர்.
கரையில் இருந்து 6 நாட்டிக்கல் தொலைவில் சென்றபோது, கடலில் சேதமடைந்து மூழ்கி கிடந்த கப்பல் மீது இவர்கள் சென்ற விசைப்படகு மோதியது. இதில் விசைப்படகு உடைந்து தண்ணீரில் மூழ்கியது.
ஒருவர் மாயம்
11 பேரும் தண்ணீரில் தத்தளித்த நிலையில் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அந்த வழியாக வந்த மற்றொரு விசைப்படகில் வந்தவர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
இதில், கண்ணதாசன் மட்டும் மாயமானார். இதனையறிந்த அவரது மனைவி வரலட்சுமி, இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மெரைன் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரையடுத்து, மங்களூரு காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாயமான கண்ணதாசனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த சூடானைச் சேர்ந்த இளைஞர் மாயம்