மீன்பிடித் தொழிலாளர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். புயல், மழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை மீனவர்களால் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல முடிவதில்லை.
இந்த காலத்தில் மீனவர்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் இணைந்து மீனவர்களுக்கு தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மீனவர்கள் தங்கள் பங்களிப்பாக 6 மாதத்திற்கு மொத்தமாக 1500 ரூபாய் செலுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் தங்கள் பங்காக தலா 1500 ரூபாய் செலுத்தும். இந்தத் தொகை சேர்த்து புயல், மழைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணமாக 4,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில், இந்த ஆண்டு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மாதந்தோறும் மீனவர்களிடம் தொகையை வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது மீனவர்களிடம் மொத்தமாக ரூ.1500க்குப் பதிலாக ரூ. 2,600 வரை செலுத்த வேண்டுமென கெடுபிடி வசூலில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.
கரோனா ஊரடங்கால் மீன்பிடித் தொழில் முடங்கியதால், கடந்த 6 மாதமாக மீனவர்கள் வருவாயின்றி தவித்து வரும் நிலையில் இந்தப் பணத்தை உடனடியாக செலுத்த முடியவில்லை.
எனவே, கூட்டுறவு சங்கங்களின் தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தில் நடக்கும் மோசடியை தடுத்து நிறுத்த மீன்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவர் சங்கத்தின் சார்பில் மீன்பிடித் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம் தலைமையில் முக்காடு போட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மின் துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.